விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல்
மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கின்றன. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு விருது வழங்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 நாட்களுக்கு முன்பு எனக்கு டில்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9ம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டில்லி செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.