வேலூர், சத்துவாச்சாரி அருகேயுள்ள ஏரியூர் பகுதி திரௌபதி அம்மன் கோயிலில் நேற்று இரவு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் உட்பட அருகருகேயுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஏரியூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில், அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடமும் ஏற்பட்ட தகராறில் அவர்களையும் ஏரியூர் பகுதி இளைஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மோதிக்கொண்ட இளைஞர்கள் மற்றும் ஆசாமிகள் அனைவருமே போதையில்தான் இருந்திருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி போலீஸார் லத்தியை சுழற்றி மோதலை தடுத்தனர். ஆனால், கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஏரியூர் பகுதி இளைஞர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் ரங்காபுரம் மற்றும் அலமேலுமங்காபுரம் பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கும்பலாகக் கூடி முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு டூ வீலர்களில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருமுகைப் பகுதியை நோக்கி வேகமாக சென்றனர்.
ஏரியூரைச் சேர்ந்த சந்துரு என்பவர்தான் பெருமுகை பகுதியிலுள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர் என்பதால், அந்த பார் உள்ளே சென்று பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கு அமர்ந்து மது குடித்துகொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பொருள்களை சேதப்படுத்திவிட்டு பாரில் இருந்த கேஸ் ஸ்டவ்வையும் தூக்கி எறிந்தனர். இதனால், தீ மளமளவென பரவியது. வன்முறையில் ஈடுபட்ட போதை கும்பல் அங்கிருந்து தப்பியது.
தகவலறிந்ததும் வேலூர் எஸ்.பி மணிவண்ணன் மற்றும் போலீஸார் பார் பகுதிக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் நேற்று இரவு முதலே ரங்காபுரம், ஏரியூர், அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் பதட்டமானச் சூழல் நிலவியது. ‘‘மோதல் நடைபெற்ற போதே இருதரப்பையும் சேர்ந்தவர்களை கைது செய்திருந்தால்… இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திருக்காதே’’ என்று கேள்வியெழுப்பி சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாவிடமும் கடுமையாக கடிந்துகொண்டார் எஸ்.பி மணிவண்ணன். இதையடுத்து, பாருக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இப்போது வரை 15 பேரை போலீஸார் பிடித்திருக்கின்றனர். கைது நடவடிக்கை தீவிரமாகியிருப்பதால், சத்துவாச்சாரி காவல் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.