100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி வரும் இதில் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக பல இடங்களில் நடைபெற்று வந்தது. அதேசமயம் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி குறித்து புதுப்புது அப்டேட்டுகள் வெளியானாலும் வேட்டையன் குறித்த தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நூறாவது நாளை தொட்டுள்ளது. இது குறித்த தகவல் ஒன்றை படக்குழுவினர் சிலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். சமீப காலமாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகப்பெரிய அரங்கு ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியின் அறிமுக பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.