டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 47வது ஐபிஎல் 2024 சீசன் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் அதிரடியில் அந்த அணி 154 ரன்கள் என்ற இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. இதனால், 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றிருக்கும் அந்த அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 11 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறாது இடத்தில் உள்ளது.
டெல்லி அணியின் பேட்டிங் தடுமாற்றம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது அந்த அணி. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் பந்த் 27 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் 1 விக்கெட் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய பிலிப் சால்ட்
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த நிலையில், நரைன் 15 ரன்களுக்கும், சால்ட் 33 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் அக்சர் படேல் வெளியேற்றினார். ரிங்கு சிங்கை 11 ரன்களில் அவுட் செய்தார் வில்லியம்ஸ்.
கொல்கத்தா அணி வெற்றி
ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது கொல்கத்தா அணி. டெல்லி அணி எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுப் போட்டிக்கு முன்னேற முடியும். அதேபோல் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிடும்.