மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது. இதனால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்ததால் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன் (Bahrain), மொரீஷியஸ், இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2022-23 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 -24 ஆண்டில் வெங்காய உற்பத்தி குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதனால் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 6 நாடுகளுக்கு 99,150 டன் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தின் (National Cooperative Exports Limited) மூலம் வெங்காய ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 100 சதவிகித முன்பணத்துடன், பேச்சுவார்த்தை விலையில், ஏஜென்சி அல்லது அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாடுகளின் ஏஜென்சிகளுக்கு வெங்காயம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் அதிக அளவு விளைவிக்கப்படுவதால், அங்கிருந்து அதிக அளவு வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தவிர, கூடுதலாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகப் பயிரிடப்பட்ட 2,000 டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.