சுற்றுலாத்தலமான சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, இன்று மாலை 5:40 மணி அளவில் முத்து எனும் தனியார் பேருந்து, ஏற்காடு மலைப்பாதை வழியாகச் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ஸ்டீரிங் லாக்’ ஆனதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் இறக்கத்தில் இறங்கி 11-வது கொண்டை ஊசி வளைவுக்குக் கீழே வந்து விழுந்தது.
இதில், சம்பவ இடத்தில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
50-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் சேலம் மோகன குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்குச் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.