கொடைக்கானல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக நேற்று கொடைக்கானலுக்கு வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிற்பகல் 1 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார்.
கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் ஓய்வெடுக்கிறார். கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, கொடைக்கானலில் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் ஓய்வெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் காரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், வழிநெடுகிலும் சாலையோரம் நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். முதல்வரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 4 வரை ட்ரோன் கேமரா, பலூன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு கெடுபிடி எதுவும் விதிக்கப்படவில்லை.