பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “நிர்மலா தேவி படித்தவர் என்பதாலும், அவருக்கு குழந்தைகள் இருப்பதாலும் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு முறையிட்டது. ஆனால், இந்தியாவில் இது மாதிரியான குற்றங்களே தற்போது புற்றுநோய் போல் பரவி வருகிறது. நீதிமன்ற தீர்ப்புகள் மூலமே இதனை சரிசெய்ய முடியும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் இரக்கம் காண்பிக்க கூடாது என்று அரசு சார்பில் வாதிட்டோம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘சமுதாயத்துக்கு எதிரான வழக்கு இது. எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் இரக்கம் காண்பிப்பது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4 -ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வங்கி தரப்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…” – ராகுல் பேச்சு
“மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவு தொடர்பாக பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் குழு தலைவர் தேவேகவுடா கூறும்போது, “பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த விசாரணை முடியும் வரை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, “இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: அமித் ஷா கருத்து: “பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” என்று ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் போலீஸார், பிரஜ்வல் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிலர் ஆன்லைன் மூலமாக போலீஸாருக்கு புகார் அளித்ததால், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் ஹாசனுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பியோடியதாக கூறப்பட்டது. அதேவேளையில், அவர் சம்பந்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு சிக்கியது குறிப்பிடத்தக்கது.
“கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள்”: கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், பிளேட்லட் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்தச் செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.
டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை: மே 1 முதல் 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு” – மோடி: “60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கும் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் வறுமையை ஒழிப்பதைப் பற்றி பேசினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து நான் மீட்டுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிரவிரமடையும் கோடநாடு வழக்கு: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக எஸ்டேட் ஊழியர் உட்பட 4 பேரிடம் ஒரே சமயத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
அமித் ஷா போலி வீடியோ விவகாரத்தில் இருவர் கைது: எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசிகளின் இடஒதுக்கீட்டை குறைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக கூறப்படும் போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உதவியாளர், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஜாமீன் வழங்குவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
கோவை அருகே தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: கோவை அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.