நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன்
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு மோகனின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி படத்தையும் தன்னையும் புரமோட் செய்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல ரசிகர்களிடம் உரையாடிய மாளவிகா மோகனன் அவர்களது பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகை ஒருவர். “அக்கா நீங்க எப்போ நடிப்பு பயிற்சி வகுப்புக்கு போக போறீங்க ?” என்று அவரது நடிப்பை கிண்டலடிக்கும் விதமாக ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், “நீ எப்போது ஏதோ ஒரு துறையில் ஒரு பொறுப்பான ஆளாக மாறுகிறாயோ அந்த நாளில் நான் நடிப்பு பயிற்சிக்குப் போவேன். அப்போது என்னிடம் இதே கேள்வியை கேள்” என்று கொஞ்சம் காட்டமாகவே பதில் அளித்துள்ளார்.
ஒருவரது நடிப்பை குறை சொல்லுமாறு நேரடியாகவே விமர்சிப்பதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கேள்வி கேட்டவரிடம் கோபமாக மாளவிகா மோகனன் பதில் கூறியதும் என இரண்டு பேரின் கேள்வி பதில்களுமே தவறானவை என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.