இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி, நீண்ட காலமாக பா.ஜனதாவின் கோட்டையாக இருக்கிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய எம்.பி. சங்கர் லால்வானி நிறுத்தப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளராக அக்ஷய் கன்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டது இல்லை. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், மத்தியபிரதேசத்திலேயே பெரிய தொகுதி இந்தூர் ஆகும். அங்கு 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மே 13-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
அத்தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே மனுதாக்கல் செய்து விட்டனர். மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கன்டி பாம் நேற்று தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், இத்தகவலை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து, பா.ஜனதா அலுவலகத்துக்கு அக்ஷய் கன்டி பாம் சென்றார். அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.
மத்தியபிரதேச பா.ஜனதா மந்திரி கைலாஷ் விஜயவர்கியா, இந்தூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலா ஆகியோருடன் காரில் அக்ஷய் கன்டி பாம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகின.
இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரிய ஸ்ரீநேட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாக நாங்கள் பேசி வருகிறோம். இதைத்தான் அப்படி சொல்கிறோம். வேட்பாளர்களிடம் இனிமையாக பேசுவது, வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுப்பது, அச்சுறுத்துவது, முன்மொழிபவர்களை மிரட்டுவது என்றெல்லாம் நடக்கிறது.
ஜனநாயகத்துக்கு எங்கே அச்சுறுத்தல் இருக்கிறது என்று காங்கிரசை கேட்பவர்கள், இதுதான் அச்சுறுத்தல் என்று தெரிந்து கொள்ளலாம். வேட்பாளர் வாபஸ் பெறும் அளவுக்கு அச்சுறுத்தல் இருந்தால், நேர்மையான, சுதந்திரமான தேர்தல் எப்படி நடக்கும்?
பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசுவதும், அவருக்கு பதிலாக கட்சி தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்புவதுமாக இருந்தால், நேர்மையான தேர்தல் எப்படி நடக்கும்? வேட்பாளர்கள் ஒருவர்பின் ஒருவராக மிரட்டப்படும்போது, தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமல் இருந்தால், நேர்மையான தேர்தல் எப்படி நடக்கும்?” என்று அவர் கூறினார்.
சமீபத்தில், குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதனால், அத்தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.