புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் மாநிலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது, ”தவறுதலாக, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பிரதமர் பதவிக்கு அதன் தலைவர்களிடையே போட்டி ஏற்படும். மு.க.ஸ்டாலின், சரத்பவார், மம்தா பானர்ஜி, லாலுபிரசாத் ஆகியோர் தலா ஓராண்டு பிரதமராக இருப்பார்கள். மீதி காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருப்பார்” என்று அவர் பேசினார்.
இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட்டிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு சுப்ரியா ஸ்ரீநேட் கூறியதாவது:-
சாத்தியமான பிரதமர் வேட்பாளர்கள் குறித்து அமித்ஷா பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லத் தொடங்கி, தற்போது அடுத்த ஆட்சி ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி என்று பேசுகிறார்கள்.யார் பிரதமராக இருப்பார், இருக்க மாட்டார் என்பதெல்லாம் நாங்கள் எடுக்க வேண்டிய முடிவு. இருப்பினும், கள யதார்த்தத்தை புரிந்து கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால், அரசியல் சட்டத்தை மாற்றி, இடஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜனதாவின் சதித்திட்டத்தை மக்கள் புரிந்து கொண்டனர். அரசியல் சட்டத்தை திருத்துவோம் என்று அனந்தகுமார் ஹெக்டே, ஜோதிமிர்தா ஆகியோர் பேசியது தற்செயலானது அல்ல. இடஒதுக்கீட்டை ஒழிப்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கை.இதை புரிந்து கொண்டு மக்கள் அவர்களை தூக்கி எறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.