ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன்
நடிகை ஸ்ருதிஹாசன் இரண்டு, மூன்று காதல்களை கடந்து வந்தவர். கடைசியாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் பார்ட்டி, பங்ஷன்களில் ஜோடியாக சுற்றி வந்தனர்.
இருவரும் பிரிந்து விட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை இருவருமே மறுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலை தளப்பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் அனைத்து படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டது உறுதியானது. எதற்குமே உடனடியாக விளக்கம் அளிக்கும் ஸ்ருதிஹாசன் இந்த விஷயத்தில் இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து சாந்தனுவை சமூகவலைத்தளத்தில் பின்தொடர்கிறவர்கள் தொடர்ந்து அவரிடம் கேட்டு வந்தனர். தற்போது சாந்தனு 'மன்னித்து விடுங்கள். இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்' என்று பதலளித்திருக்கிறார். இதன் மூலம் தங்களது பிரிவை சாந்தனு பிரிவை உறுதிப்படுத்தி உள்ளார்.