திருமணங்களை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், திருமணம் முடிந்த பிறகு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளைத்தான் ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் காண முடியும்.
இதைத் தவிர்க்கும் வகையில் சிலர் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து திருமணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு திருமணத்திற்கான செலவு குறைவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலா மற்றும் கஜோல் என்ற ஜோடி தங்களின் திருமண கழிவுகளை குறைக்கும் வகையில் (Low Waste Marriage) வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர். இவர்கள் வழக்கமான பெரிய பிளாஸ்டிக் பேனர்களுக்கு பதிலாக, கரும்பலகையில் திருமண ஜோடியின் பெயர் மற்றும் வரவேற்பு எழுதியுள்ளனர்.
பனை ஓலை மற்றும் மலர்களில் அலங்காரம், விருந்தினருகளுக்கு கண்ணாடி கிளாஸில் ஜூஸ், திருமணத்தை காண வந்தவர்களுக்கு வாழை இலை மற்றும் மட்கும் தட்டுகளில் விருந்து வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் திருமண நிகழ்வில் பிளாஸ்டிக் முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை. இதன்மூலம் 800 பிளாஸ்டிக் பாட்டல்களின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட தட்டுகள் மற்றும் உணவுக் கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட 238 கிலோ மட்கும் கழிவுகள் உரமாக்குதல் நடவடிக்கைகாக அனுப்பப்பட்டது.
இந்த ஜோடியின் இயற்கையை நேசிக்கும் திருமண முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. இவர்களின் வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.