நாளை அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அவரின் ரசிகர்கள் இன்றே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். அஜித்குமார் இப்போது நடித்துவரும் `விடா முயற்சி’, `குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘தீனா’, ‘பில்லா’ ஆகிய படங்கள் நாளை ரி-ரிலீஸ் ஆகின்றன. அஜித் இப்போது மகிழ்திருமேனியின் இயக்கத்தில் ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். இதில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸான்ட்ரா எனப் பலரும் நடித்துவருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாகப் படம் உருவாகிவருகிறது. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் 50 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது என்றும், மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாள்களாவது தேவைப்படும் என்றும் சொல்கின்றனர்.
இதற்கிடையே அஜித்தின் 63வது படமான ‘குட் பேட் அக்லி’யை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக், அஜித்தின் தீவிர ரசிகராவார். அவரது இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பும் உள்ளது. படத்துக்கான தொழில்நுட்ப டீமையும் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ படங்களின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் ராமானுஜம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ‘துணிவு’, ‘மார்க் ஆண்டனி’ படங்களுக்கு எடிட்டிங் செய்த விஜய் வேலுக்குட்டி இதற்கும் படத்தொகுப்புப் பணிகளைச் செய்யவிருக்கிறார். ‘விடாமுயற்சி’யின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஆக்ஷனைக் கவனிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது, மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது, சிம்ரன் அல்லது மீனா நடிக்கின்றனர், தெலுங்கின் டாப் ஹீரோயினான ஶ்ரீலீலாவும் நடிக்கிறார் என்றெல்லாம் பல தகவல்கள் இணைதளத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்து பட வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஆதிக், அஜித்தை இயக்குவதால், ‘குட் பேட் அக்லி’யின் கதையில் சிறப்பு கவனம் எடுத்து எழுதிவந்தார். இதற்காக சில மாதங்களுக்கு முன்னரே வெளியூர் சென்ற அவர், முழுக்கதையும் எழுதி முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். அஜித்திற்கும் அவரது கதை முழுத் திருப்தியாகவே படப்பிடிப்பை உடனே ஆரம்பித்துவிடலாம் என்று நினைத்தனர். படத்தில் மீனா நடிக்கிறார், சிம்ரன் நடிக்கிறார் என்று வெளியான தகவல் உண்மையில்லை. நட்சத்திரத் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. யாரும் இன்னமும் முடிவாகவில்லை.
இதற்கிடையே வருகிற 10-ம் தேதி நல்ல நாளாக இருப்பதால் அன்றே ‘குட் பேட் அக்லி’யின் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் எனத் திட்டமிட்டு வருகின்றனர். செம மாஸான ஓப்பனிங் பாடல் ஷூட்டுடன் படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து சண்டைக் காட்சிகள் எடுக்கின்றனர். இன்னொரு முக்கியமான விஷயம், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதுவும் நாளை வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.