டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, சஹால் என டி20 உலகக்கோப்பைக்கு புதுமுகங்களாக இருக்கக்கூடிய வீரர்கள் சிலர் அணியில் முக்கிய இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால், ரிங்கு சிங்கிற்கு பிரதான 15 வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்படவில்லை. கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் 4 வீரர்களுக்கான பட்டியலில்தான் ரிங்கு சிங் வைக்கப்பட்டிருக்கிறார். முக்கிய அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே ரிங்கு சிங் முக்கிய அணிக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. மற்றபடி அவர் கூடுதல் வீரர்கள் பட்டியலில் மட்டுமே இருப்பார்.
இதனால்தான் கொந்தளித்திருக்கிறது சமூகவலைதள கிரிக்கெட் வட்டாரம். ரசிகர்கள் ரிங்கு சிங்கை ஏன் முக்கிய அணியில் எடுக்கவில்லை என கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி வருகின்றனர். அவற்றில் நியாயம் இல்லாமலும் இல்லை.
ரிங்கு சிங் ஒரு முழுமையான டி20 வீரர். டி20 க்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் அவரிடம் அத்துப்படியாக இருக்கும். பினிஷர் ரோலில் இறங்கி ஒரு கலக்கு கலக்கிவிடுவார். கடைசி சில ஓவர்களில் போட்டியின் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை படைத்தவர். ஐ.பி.எல்-இல் கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளில் அதிரடியாக ஆடி மிரள வைத்திருக்கிறார்.
2023 ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்களை அடித்திருந்த வீரரும் அவர்தான். அந்த சீசனில் மட்டும் 474 ரன்களை 149.52 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். இதில் 4 அரைசதங்களும் அடக்கம்.
இந்தச் சமயத்தில் பிசிசிஐயுமே ரிங்கு சிங்கை இந்திய டி20 அணிக்கான வருங்காலமாக பார்க்க தொடங்கியது. டி20 தொடர்களில் நல்ல வாய்ப்புகளையும் வழங்கியது. இதுவரைக்கும் இந்திய அணிக்காக 11 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார். 356 ரன்களை 176 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். கடைசிக்கட்ட ஓவர்களில்தான் களத்திலேயே இறங்குவார். ஆடியிருக்கும் இந்த 11 போட்டிகளில் பல போட்டிகளில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஓடிஐ உலகக்கோப்பை முடிந்த நான்கு நாள்களிலேயே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு டி20 தொடர் நடந்திருந்தது. இந்தத் தொடரெல்லாம் முழுக்க முழுக்க டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து நடத்தப்பட்ட தொடர். அதில் ரிங்கு சிங்கைத் தேர்வு செய்ததன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான ரேடாரில் ரிங்கு சிங் இருக்கிறார் என்பதை உறுதி செய்தது பிசிசிஐ. இந்தத் தொடர் முழுவதுமே ரிங்கு நன்றாகத்தான் ஆடியிருந்தார்.
208 ரன்களை சேஸ் செய்த ஒரு போட்டி கடைசி ஓவர் வரை சென்றிருக்கும். அதில் 14 பந்துகளில் 22 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருப்பார். இன்னொரு போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 235 ரன்களை அடித்திருக்கும். அந்தப் போட்டியில் வெறும் 9 பந்துகளில் 31 ரன்களை அடித்திருப்பார். இன்னொரு போட்டியில் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்காது.
நடக்கப்போகும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில்தான் இந்திய அணி ஆடியிருக்கும். அதிலும் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கடைசியாக ஆடிய டி20 போட்டியில் 39 பந்துகளில் 69 ரன்களை அடித்திருப்பார். இதே தொடரின் இன்னொரு போட்டியில் 9 பந்துகளில் 16 ரன்கள். முன்னதாக ஆசியப் போட்டியில் ஒரே ஒரு போட்டியில் ஆடத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதிலும் 250-க்கு நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்களை அடித்திருந்தார். அயர்லாந்துக்கு எதிரான தொடர் ஒன்றிலும் ஒரே ஒரு போட்டியில்தான் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதிலும் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்கள்.
கடந்த ஓடிஐ உலகக்கோப்பைக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தக்கட்ட அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டது. அந்த யோசனையின் பலனாக அணிக்குள் அழைத்து வரப்பட்டவர்தான் ரிங்கு சிங். அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால், நல்ல ரிசல்ட்தான் கிடைக்கவில்லை. உலகக்கோப்பைக்கான முக்கிய அணியில் அவர் இல்லை. 15 பேருடன் அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அணியிலுமே ரிங்கு சிங் அளவுக்கு தடாலடி காட்டக்கூடிய பினிஷர் என யாருமே இல்லை. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடுவார். ஆனால் போட்டிகளை முடித்துக் கொடுக்கமாட்டார். அதேதான் ரிஷப் பண்ட்டிற்கும். மேலும் சர்வதேச டி20 யில் அவர் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தேவையாக இருக்கும் கட்டத்தில்தான் இருக்கிறார். ஜடேஜாவும் ஹர்திக்கும் அனுபவம் வாய்ந்தவர்கள்.
ஆயினும் தற்போதைய நிலையில் அவர்களுடன் ஒப்பிட்டாலும் ரிங்கு சிங்தான் நல்ல ஆப்சனாகத் தெரிவார். அப்படியிருந்தும் அவரை ஏன் 15 பேர் கொண்ட அணியில் எடுக்கவில்லை என்றுதான் தெரியவில்லை. ரிங்கு சிங்கின் நடப்பு ஐ.பி.எல் ஃபார்ம் பிசிசிஐக்கு ஒரு தயக்கத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், இப்படி தயங்கிக் கொண்டே ரிஸ்க் எடுக்க மறுத்தால் ஒரு காலத்திலும் இந்திய அணி நவீன ட்ரெண்ட்டுக்கான அணியாக இருக்காது. டி20 உலகக்கோப்பையை ஆடும் எல்லா அணியிலும் பாரபட்சமே பார்க்காமல் அதிரடியில் வெளுக்கும் ரிங்கு சிங் மாதிரியான வீரர்கள் இருப்பார்கள். ஆனால், இந்திய அணியில் மட்டும் ரிங்கு இருக்கமாட்டார்.
மரபார்ந்த ரீதியில் பழைய வழிகளைப் பின்பற்றியே அணியைக் கட்டமைக்கும் விதத்தை இந்திய அணி மாற்றியே ஆக வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஓர் உதாரணமாகியிருக்கிறது.