நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’, ‘இந்தியன் -2’ உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த மாதம் முழுவதும் தேர்தல் களத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது மீண்டும் தனது படங்களின் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கமல், தனது மகள் ஸ்ருதிஹாசனிடம் ஜாலியாகப் பேசும் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கமல், ஸ்ருதியின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்திருந்தார். அப்போது ‘நிறைவேறாத ஆசைகள்’ குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கமல், “நிறைவேறாத ஆசைகள் எனக்கு நிறைய இருந்தன. ஆனால், அதையெல்லாம் பட்டியல் போட்டு வைக்க எனக்குப் பிடிக்காது.
சிறுவயதில் மொட்டை மாடியில் சிறிய அறையில் என்னை என் அப்பா தங்க வைத்தார். ‘அந்த அறை வசதியாக இல்லை என்று தோன்றும் போது அங்கிருந்து வா உனக்கு மாடு வாங்கித் தருகிறேன். அதைப் பார்த்துக் கொள்’ என்றார் கண்டிப்புடன். அப்போது எனக்குப் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் இருந்தால் போதும் என்று நினைத்தேன். அதை வைத்து எனக்கு என்ன வேண்டும், எனது ஆசை என்னென்ன என்பதை நான் பட்டியலிட்டு வைப்பேன். அதில் என்ன எழுதுவேன் என்பது கூட நினைவில் இருக்காது. எழுதிவிட்டு மனநிறைவுடன் தூங்கிவிடுவேன்.
அதில் ஸ்கூட்டர் வாங்கணும், கார் வாங்கணும் என்ற ஆசைகளெல்லாம் இருந்தது. பிறகு நல்ல நிலைமைக்கு வந்தபின் அதையெல்லாம் வாங்கினேன். கார் வாங்க வசதி வந்த பின், அதற்கடுத்து என்ன விமானம் வாங்குவதா? இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேதான் போகும். இதற்கு முடிவே இருக்காது என்பதைப் புரிந்துகொண்டேன். இப்போதெல்லாம் எனக்கு இதை வாங்க வேண்டும், அதை வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அதற்காகத் துறவியல்ல நான்.
இப்போது கூட ஷாருக்கான் நேர்காணல் ஒன்றில், ‘எனக்குச் சொந்தமாக விமானம் வாங்க ஆசை’ என்கிறார். அதைப் பார்க்கும்போது, அவருக்கு இன்றும் நிறைய ஆசைகள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அதுபோன்ற ஆசைகளெல்லாம் கிடையாது. தேவையென்றால் நமக்குப் பிடித்த விமானத்தில் சென்று வரலாம், அதற்காக விமானத்தை வாங்கி என்ன செய்யப் போகிறோம். தேவையில்லாமல் அனைத்தையும் வாங்கி அதைப் பயன்படுத்தக் கூட நேரமில்லாமல் இருப்போம்.
‘இக்கிகய்’ (Ikigai) எனும் புத்தகத்தை எழுதியவர் என் நண்பர். ஒருமுறை நான் அவரைச் சந்தித்துப் பேசினேன். மனதிற்குப் பிடித்ததைச் செய்து மகிழ்ச்சியாக வாழச் சொல்லும் அவரது ‘இக்கிகய்’ புத்தம் எனக்கு நிறைய விஷயங்களைப் புரிய வைத்தது. அப்படித்தான் நான் வாழ விரும்புகிறேன்” என்றார்.
இதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தின் பாடல் கம்போஸ் பற்றிப் பேசியவர், “சமீபத்தில் நான், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் சேர்ந்து ‘தக் லைஃப்’ படத்திற்காக இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்தோம். மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என் மனதிற்குப் பிடித்ததை மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். மற்றபடி, இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கில்லை” என்று பேசியிருக்கிறார்.