சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, நேற்று இந்த மனு மீது தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார். இதற்கிடையே செந்தில்பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘வங்கி தரப்பில் அசல் ஆவணங்களை ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், 2 ஆவணங்களின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் நகல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைத்து உள்ளதாகவும், அசல் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை இந்த மனு மீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது’ என்றும் கூறியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார். அதேவேளையில் செந்தில் பாலாஜியின் புதிய மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஜூன் 4-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.