ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் போலி வீடியோ இந்த எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு இருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 23-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டத்திற்கு புறம்பாக தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும், அதற்கு பதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்குவோம் என்று பேசினார்.
ஆனால், சிலர் இதனை மார்பிங் செய்து, எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என அமித் ஷா கூறியதாக போலி வீடியோக்களை வெளியிட்டனர். இந்த போலி வீடியோ ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எக்ஸ் தள கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கடந்த ஞாயிறன்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் கணக்கு புதன்கிழமை அன்று முடக்கப்பட்டுள்ளது. சட்டபடியான கோரிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக எக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போல வீடியோ விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர், மாநில சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கஜேந்திர குமார் சிங் ஆகியோருக்கு டெல்லி போலீஸார், நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.