ஆந்திராவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: பா.ஜனதா கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில சட்டசபை தேர்லுக்காக பா.ஜனதா கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளும், 17 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜனதா கட்சிக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளுடன், 10 சட்டசபை தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு 2 நாடாளுமன்ற தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வருகிற 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா கூட்டணியின் கூட்டு தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

மேலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், இந்த தேர்தல் அறிக்கை சூப்பர் சிக்ஸ் போன்றது என்றார்.

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைக்கு ரூ.15 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.