பொதுவாக தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் அல்லது சினிமா பிரமுகர்களையே கட்சியினர் நியமிப்பது வழக்கம். இவர்கள் மாநிலம் முழுவதும் ஊர் ஊராக சென்று தங்களை நியமனம் செய்த கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம்.
ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக 12 சாமானியர்களை தேர்ந்தெடுத்து தனது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவைத்திருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் வரும் மே மாதம் 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையொட்டி 4 இல்லத்தரசிகள், 2 விவசாயிகள், ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஒரு தையல்காரர், 4 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என மொத்தம் 12 பேரை ஜெகன்மோகன் ரெட்டி தேர்வுசெய்துள்ளார்.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்மோகன் ரெட்டி செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். இவர்களோடு அவர்கள் வசிக்கும் பகுதிகளை சேர்ந்தவர்களும் உடன் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.