உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர – சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் மே தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உலகெங்கும் விரவிக் கிடந்த தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தகர்க்க – உரத்த நியாயங்கள் வெல்ல, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முயன்றதற்கான வெகுமதியே, இன்றைய மே தினமும், தொழிலாளர் உரிமைகளுமாகும்.
இந்த வரலாற்று படிப்பினை எமக்கும் முன்னுதாரணமாய் நிமிர்ந்து நிற்கின்றது. சரிநிகர் சமனென்ற உரிமைகளை பெற்றவர்களாய் எமது மக்கள், எமது தாயகமெங்கும் உறுதியாக வாழ வேண்டுமாயின் பலமான பொருளாதாரம் அவசியம் என்ற புரிதலின் அடிப்படையிலேயே, எமது மக்களுக்கான பல்வேறு பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சியில் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், பிரச்சினைகளற்ற – கௌரவமான வாழும் சூழலை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்களாயின், தங்களுடைய வெற்று அரசியல் சூனியமாகிவிடும் என்று அஞ்சுகின்ற சிலர், எமது முயற்சிகளுக்கு சேறடிக்கும் கனவோடு ஒன்றுபட்டும் நிற்கின்றனர். காலம் காலமாக ஏமாற்றப்பட்ட வடுக்களுடன் இருக்கும் எமது மக்கள், தங்களுடைய தீர்மானங்களே வடுக்களை ஏற்படுத்துகின்றவர்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
என்ற உண்மையை உணர்ந்து கொள்வதன் மூலம் சரியானவர்களுக்கு மேலும் பலம் சேர்க்க வேண்டும். அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தி, அரசியல் தீர்வு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்திருக்கும் எமது மக்கள், எமது மதிநுட்ப சிந்தனைகளை ஏற்று நடைமுறை சாத்திய வழிமுறையில் திரண்டெழ வேண்டும்.
தாயக தேசமெங்கும் தமது எதிர்பார்ப்புக்களை நிலைநிறுத்த எமது மக்கள் இனி வரும் கலங்களை தம் கைகளில் எடுப்பர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.