சென்னை: மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பை போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளாக 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16,72,785 உறுப்பினர்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 19,576 தொழிலாளர்களுக்கு ரூ.11.28 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 44 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய பதிவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திமுக அரசின் சார்பில், தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பாளர்களுக் குள் உயர்வு, தாழ்வு இல்லை. வேறுபாடு இல்லை. உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். அந்த நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவுகூரவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மே தினம், உலகின் மிகப்பெரும் ஜனநாயக அமைப்புக்கான நாட்டின் தேர்தல் திருவிழாவுடன் இணைந்து வருகிறது. நீடித்த அமைதிக்கான கோரிக்கையில் நாம் அணி சேர்ந்து வலிமையாக குரல் எழுப்பி ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம் என உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உழைக்கும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் வண்ணம் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில், உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, அதன்மூலம் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினம். வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உருண்டு கொண்டிருக்கும் உலகத்தை கைகளில் தாங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் திருநாளில் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்திய தொழிலாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவை. அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க, தொழிலாளர் விரோத பாஜக அரசை வீழ்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தொழிலாளர்களின் உழைப்பை மையமாக வைத்து தான் தொழில்களும், நாட்டு மக்களும், நாடும் முன்னேறுகிறது. மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்கும் தொழிலாளர்கள் மேம்படவும், அவர்கள் வாழ்வுக்கான வளமை பெருகவும் உலகத்தார் அனைவருமே இன்றைய நாளில் உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்துக்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களையும், அவர்களது உழைப்பையும் இந்நன்னாளில் போற்றி மகிழ்வோம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது. உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது. உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
இதேபோன்று, பாமக தலைவர் அன்புமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வி.கே.சசிகலா, திக தலைவர் கி.வீரமணி, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவிபச்சமுத்து, சு.திருநாவுக்கரசர் எம்பி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.