மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
பாலிவுட் திரை பிரபலங்கள் பாஜகவுக்கு எதிராக பேசுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. அதோடு இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற போலிவீடியோவும் பரவி வருகிறது.
மகாராஷ்டிராவின் மாதா, தாராஷிவ், லத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, போலி வீடியோ விவகாரம் குறித்து காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோத முடியாமல் காங்கிரஸ் கட்சி அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. எனது குரல், எனது முகத்தை பயன்படுத்தியும் போலி வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இதற்கு முடிவு கட்டப்படும்.
ஜனநாயகம், அரசமைப்பு சாசனம், இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் பொய்களை பரப்பி மக்களிடையே அச்சத்தை விதைத்து வருகிறது. நமது நாட்டை சுமார் 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. இந்த 60 ஆண்டுகளில் செய்ய முடியாதசாதனைகளை எனது 10 ஆண்டு கால ஆட்சியில் சாதித்து காட்டி உள்ளோம்.
கடந்த 60 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
மத்தியில் வலுவான ஆட்சி அமைந்தால் மட்டுமே வளமான பாரதம் உருவாகும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, “பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தது.
இந்ததாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் பகிரங்கமாக அறிவித்தேன். மறைந்திருந்து தாக்குவது எனக்கு பிடிக்காது. நாட்டுக்காக எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்வேன்” என்றார்.
வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: மே 7-ம் தேதி நடைபெற உள்ள 3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. மக்களின் சொத்துகளை அபகரித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது.
வாரிசுரிமை வரி விதிப்பது உட்பட பல்வேறு அபாயகரமான கொள்கைகளை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. இந்த சதியை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.