சென்னை: ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பக்கவாட்டு தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் இடிபாட்டில் சிக்கி கூச்சலிட்டனர்.
அந்த வழியே சென்றவர்கள் மற்றும் ஏற்காடு போலீஸார், தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 34 பேர் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…
— M.K.Stalin (@mkstalin) May 1, 2024