ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. மாநிலத்தில் உள்ள பல பகுதிகள் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளன. இதையடுத்து நக்சலைட்டுகளை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16-ந் தேதி கன்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்ட்டரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்படும் அபுஜ்மத் பகுதியில் உள்ள டெக்மேட்டா மற்றும் ககுர் கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் மாநில ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்த கூட்டுக்குழுவினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை இருதரப்புக்கும் நடந்த மோதலில், 10 நக்சலைட்டுகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் பெண்கள். கொல்லப்பட்ட 10 பேரின் பெயர் விவரம் உள்ளிட்டவை இன்னும் தெரியவில்லை.
இது தொடர்பாக மாநில துணை முதல்-மந்திரியும், போலீஸ் மந்திரியுமான விஜய் சர்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கடந்த 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது நடத்தப்பட்ட 2-வது பெரிய தாக்குதல் இதுவாகும். மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இது ஒரு பெரிய வெற்றியாகும்.
சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துணிச்சலாக எதிர்கொண்ட போலீஸ் படையினருக்கு வாழ்த்துகள்.
நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் தலைமையிலான மாநில அரசு இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், அவர்களுக்கு சிறந்த மறுவாழ்வு ஏற்பாடு செய்வோம். பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும். அங்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.