CSK vs PBKS Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் 17வது சீசன் (IPL 2024) தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 9, 10 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற 10 அணிகளும் இன்னும் முட்டி மோதி வருகின்றன. மும்பை, பெங்களூரு அணிகள் முறையே கடைசி 9, 10ஆவது இடத்தில் இருந்தாலுமே சற்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.
அதேபோலவே, 8வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி இருந்தாலும் அந்த அணி இன்னும் பிளே ஆப் ரேஸில் முன்னணியில்தான் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் இருந்தே வலுவாக இருந்தாலும் அந்த அணியின் சற்று மோசமான காம்பினேஷன் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதிலும் குறிப்பாக ஷிகர் தவாணின் (Shikhar Dhawan) காயத்திற்கு பிறகு அந்த அணியின் ஓப்பனிங்கும் சுமாராகவே இருந்தது.
பிரஷாக வரும் பஞ்சாப்
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 262 ரன்களை துரத்தி வரலாற்று சிறப்புமிக்க சேஸிங்கை செய்தது. அதன்பின் தற்போது நேராக சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ள பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை இன்று சந்திக்கிறது. பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோவ் கடந்த போட்டியில் முரட்டு பார்முக்கு திரும்பினர். மிடில் ஆர்டரில் ரூசோ, சாம் கரன், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா, அஷுடோஷ் சர்மா என ஹர்பிரீத் ப்ரர் வரை நீண்ட பேட்டிங் உள்ளது.