ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் தெலுங்கு தேசம் தனது சைக்கிள் சின்னத்திலும், பாஜக தாமரை சின்னத்திலும், ஜனசேனா கண்ணாடி டம்ளர் சின்னத்திலும் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தி உள்ளன. இதில் ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 10 சட்டப்பேரவை மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஆனால், ஆந்திராவில் சில பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளில் ஜனசேனா கட்சியின் சின்னமான கண்ணாடி டம்ளர் சின்னத்தை சுயேச்சைகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
இதனால் வாக்காளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது குறித்து 2 முறை மாநில தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கூட்டணி சார்பிலும், ஜனசேனா கட்சி சார்பிலும் முறையிடப்பட்டது. ஆயினும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வேறு சின்னம் ஏதும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
ஆதலால், மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை எதிர்த்து, ஜனசேனா கட்சி சார்பில் நேற்று ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததும், இதில் ஆஜரான மாநில தேர்தல் ஆணையம் சார்பிலான வழக்கறிஞர் 24 மணி நேரம் அவகாசம் கேட்டார். இதனால் வழக்கு இன்றைக்கு (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.