சென்னை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.
அதன்படி இந்த டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், பாண்ட்யா துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷிவம் துபே தேர்வாகி உள்ளார்.
இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதம், 24 சிக்சருடன் 350 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அனுபவத்திலும், தனது ஆட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதிலும் அவர் முழுமையான ஒரு வீரராக தெரிகிறார். தனது பலத்தை மேலும் மேம்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்.
முந்தைய ஆண்டை விட இந்த முறை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை நிரூபித்து காட்டியுள்ளார். அவர் தொடர்ந்து இதே பார்மில் நீடித்தால், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.