புதுடெல்லி: “பழங்குடியின, பட்டியலின மற்றும் ஓபிசி மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதை யாரும் பறிக்க முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வராது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பானஸ்கந்தாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தோ்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2014ல் ஒரு டீக்கடைக்காரரால் (சாய் வாலா) நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், காங்கிரஸுக்கு தேர்தலில் சரியான பதிலடியை இந்த நாடு வழங்கியது.
ஒரு காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ், 40 இடங்களுக்குள் சுருங்கிப் போனது. பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதை யாரும் பறிக்க முடியாது. மோடி உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது
இன்று, காங்கிரஸின் இளவரசருக்கும், அவரது கட்சிக்கும் நான் சவால் விட விரும்புகிறேன். அரசியலைப்போடு விளையாடமாட்டோம் அல்லது மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும் . பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.
ஒட்டுமொத்த மோடி மற்றும் ஓபிசி சமூகத்தினரையும் திருடர்கள் என்று அழைத்தார் காங்கிரஸ் இளவரசர். தற்போது 2024ல், இடஒதுக்கீடு முடிவுக்கு வரும் என்ற புதிய பொய்யை காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் பரப்பி வருகின்றனர்.
காங்கிரஸுக்கு எந்தவித தொலைநோக்குப் பார்வையும் கிடையாது, நாட்டு மக்களுக்கு வேலை செய்வதற்கான ஆர்வமும் இல்லை. ஆனால், நாங்கள் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன் மேம்பாட்டிற்காக புதிய தீர்மானங்களை கொண்டு வர உள்ளோம்” எனத் தெரிவித்தார்.