தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) கொட்டகலை பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விசேட விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்தீரமான பொருளாதாரத்தை கட்டுயெழுப்ப அமைச்சரவை பக்கபலமாக இருந்தது. அதேபோல் நாடு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை 2023 ஆம் ஆண்டில் கொண்டுவர காரணமாக அமைந்தார்கள். தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை அவ்வாறு மறந்தாலும் ஜீவன் தொண்டமான் விடப்போவதில்லை என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டம், அரிசி விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்துறை வருமானமும் அதிகரித்து செல்கின்றது. தற்போது ரூபாய் பலமடைந்துள்ளது. மலையக கிராம அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்படும். மலையக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன். 1982 ஆம் ஆண்டில் தோட்டப்பாடசாலைகளை நாம் ஏற்படுத்தினோம். அதற்கு மறைந்த செளமியமூர்த்தி தொண்டமான் எம்முடன் இணைந்து செயற்பட்டார். மேலும் 1986 இல் பிரஜா உரிமை வழங்கவும் 2003 இல் எஞ்சிய மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கவும் தாம் செயற்பட்டதாக ஜனாதிபதி இதன்போது ஞாபகப்படுத்தினார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் மலையகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் கட்டியெழுப்பப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநனருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் , தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் , தொழிற்சங்க தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.