சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று விடுத்த அறிக்கை:
நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். 1950-ல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து போராடியவர் பெரியார்.
இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், அப்போதைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி 1951-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி கொண்டு வரப்பட்ட அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இதன்படி இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்து இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்ற பொய்யை பிரதமர் மோடி திரும்ப திரும்ப கூறி வருகிறார். இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார்.
தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூ.8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. இந்தத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை. பாஜகவை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.