கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் ரீ-ரிலீஸ் படங்களுக்குத் திரையரங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 20ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியிருந்த விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூகவலைதளமெங்கும் இந்த ரீ ரிலீஸ்தான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. வசூலிலும் சக்க போடு போட்டது. உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஏதும் கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கு வரவில்லை. குறிப்பாக பெரிய படங்கள் ஏதும் ரிலீஸாகவில்லை. இந்த சமயத்தில் வெளியான மலையாள திரைப்படங்களான ‘பிரமயுகம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது மலையாள படங்களும் பெரிதாக வரவில்லை என்பதால் இந்த ரீ ரிலீஸ் கொண்டாட்டங்கள் கோலிவுட் திரையரங்குகளில் கலைகட்டி வருகின்றன.
அவ்வகையில் இன்று மே 1ம் தேதி உழைப்பாளார் தினம். அஜித்தின் பிறந்தாள். அஜித்தின் இந்த பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இன்று தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் ‘தீனா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித் ரசிகர்கள் இதைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ‘தீனா’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “எல்லோருக்கும் மே தின வாழ்த்துகள். என் மனதிற்கு நெருக்கமான ‘தீனா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாவது மகிழ்ச்சியாகயிருக்கிறது. ‘தல’ என்பதற்கு அர்த்தமாக அக்கதாப்பத்திரத்தில் நடித்த அஜித் சாருக்கு நன்றி. ‘தீனா’ திரைப்படத்தை மீண்டும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.
இன்று முன்னணி இயக்குநராகப் பல ஹிட் படங்களைக் கொடுத்து வரும் ஏ.ஆர். முருகதாஸ் ‘தீனா’ படம் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே உச்சத்தில் இருக்கும் அஜித்தை வைத்து இயக்கி 2001ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘தல இருக்கும்போது வால் ஆடக் கூடாது’ என்ற வசனம் அஜித்திற்கு ‘தல’ என பெயர் வரக் காரணமாக இருந்தது. ‘தீனா’ படத்திற்குப் பிறகு விஜயகாந்த், விஜய், சூர்யா, ரஜினி பலருடன் இணைந்திருக்கிறார் முருகதாஸ். ஆனால், மீண்டும் அஜித்தை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. தற்போது சிவகார்த்திகேயன், சல்மான் கானை வைத்து படம் இயக்கவிருக்கும் முருகதாஸ், அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என அஜித் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.