Doctor Vikatan: என் உறவுக்கார பெண் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு 8 மாதங்களிலேயே ரத்த அழுத்தம் அதிகமாகி, பனிக்குட நீர் வற்றிப்போய், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்கிறார்கள். இப்படி பிரசவ தேதிக்கு முன் பனிக்குட நீர் வற்றிப்போகுமா…. அதனால் கருவிலுள்ள குழந்தை பாதிக்கப்படுமா…. இதைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
கருவிலுள்ள குழந்தையைச் சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை ‘ஆலிகோஹைட்ராமினியாஸ்’ (Oligohydramnios) என்கிறோம்.
குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்தப் பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது. பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.
பனிக்குட நீரானது குழந்தையின் வளர்ச்சிக்கும், சுவாச மண்டலம் மற்றும் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. குழந்தையின் நஞ்சுக்கொடியானது குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையில் அழுத்தப்படாமல் தவிர்க்கவும் உதவுகிறது. பனிக்குட நீரானது 10-15 செ.மீ வரை இருந்தால் அது நார்மல் என்றும், 5 செ.மீட்டரைவிட குறைவாக இருக்கும்போது அதை அப்நார்மல் என்றும் சொல்வோம். அதுவே 2 செ.மீட்டருக்கும் குறைவாக இருந்தால் அதை ‘ஆலிகோஹைட்ராமினியாஸ்’ என்று சொல்வோம்.
கருவிலுள்ள சிசுவின் சிறுநீரகங்கள் சரியான அளவில் சிறுநீரை உற்பத்தி செய்யாவிட்டாலோ, குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிரச்னை இருந்தாலோ பனிக்குட நீர் குறையலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் (ப்ரீஎக்லாம்ப்சியா) பாதிப்பாலும் பனிக்குட நீர் குறையும். கர்ப்பகால நீரிழிவு பாதித்த நிலையில் சிலருக்கு பனிக்குட நீர் குறையலாம், சிலருக்கு அது அதிகரிக்கலாம். இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்த நிலையில், அரிதாக சில பெண்களுக்கு பனிக்குட நீர் குறையும் பிரச்னை ஏற்படலாம்.
குறைமாதத்தில் பனிக்குடம் உடைந்து அதிலுள்ள நீர் முழுவதும் வெளியேறுவதாலும் இப்படி நிகழலாம். மாதந்தோறும் மருத்துவரிடம் செக்கப்புக்கு செல்லும்போது வயிற்றின் அளவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, பனிக்குட நீர் குறைவாக உள்ளதை மருத்துவர் கண்டுபிடிப்பார். பனிக்குட நீர் உடைந்து நீர் வெளியேறுவதை சம்பந்தப்பட்ட கர்ப்பிணியால் உணரமுடியும். அப்படி உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
20 வாரங்களிலேயே இப்படி பனிக்குட நீர் குறைந்தது தெரியவந்தால், கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்களில் ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். அப்படியில்லாத பட்சத்தில் குறைமாதப் பிரசவம் நிகழவும், கரு கலையவும், தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம்.
கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில், குறிப்பாக பிரசவம் நெருங்கும்வேளையில் பனிக்குட நீர் குறைந்தால் கர்ப்பிணிக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குழந்தையின் எடை குறையலாம். குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையலாம். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டிய அவசர நிலை ஏற்படலாம். சிசேரியன் தேவைப்படலாம். 37 வாரங்களைக் கடந்த நிலையில் பனிக்குட நீர் குறையும் கர்ப்பிணிகளுக்கு உடனடியாக டெலிவரி செய்வதுதான் சிறந்த சிகிச்சை.
அதுவே 32 வாரங்கள், அதற்கு முன் பனிக்குட நீர் குறையும் நிலையில் உடனடியாக டெலிவரி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு முன் பிரசவம் பார்க்கும்போது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வைத்திருக்க வேண்டி வரலாம். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அதிலிருந்து காப்பாற்ற, தாய்க்கு ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்படும். அதன் மூலம் குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதன் பிறகு பிரசவம் வரை குழந்தையின் அசைவு, வளர்ச்சி போன்றவற்றைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். குழந்தையின் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் பட்சத்தில் அவசரமாக பிரசவம் செய்து குழந்தையை எடுக்க வேண்டியிருக்காது.
பனிக்குட நீர் என்பது தாயின் ரத்தமும் சேர்ந்தது என்பதால் கர்ப்பிணிக்கு, டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எடையை சரியாக வைத்துக்கொள்ளவும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் மிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.