பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் செய்த சேவை அவரை அனைவரது மனதிலும் ஹீரோவாக உயர்த்தியிருக்கிறது. சில தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் நிஜவாழ்க்கையில் பலருக்கும் ஹீரோவாக இருக்கிறார். அவரிடம் தினமும் ஆயிரக்கணக்கானோர் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளை அனுப்புகின்றனர். அதில் தன்னால் முடிந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
அப்படிப்பட்ட தன் ஹீரோவைச் சந்திக்கவேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த மகேஷ் என்ற ரசிகர் இந்தியா கேட்டில் இருந்து மும்பைக்கு ஓடி வந்துள்ளார். அதாவது 1500 கிலோமீட்டர் தூரத்தை ஓடியே கடந்துள்ளார். அவ்வாறு வந்த மகேஷ், நடிகர் சோனு சூட்டைச் சந்தித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது எடுத்த போட்டோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது. ‘இந்தியா கேட்டு கேட்வே ஆப் இந்தியா 1500 கிலோமீட்டர் ஓட்டம்’ என்று குறிப்பிட்டு சோனு சூட் மகேஷை சந்தித்துப் பேசிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதோடு நிஜ ஹீரோக்களுக்குச் சமர்ப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ரசிகர்கள் தங்களது நட்சத்திரத்திரங்களின் படங்களுக்கு எதையெல்லாமோ செய்கின்றனர். அது போன்ற ஒரு ரசிகர் சோனு சூட்டைக் கௌரவிக்க 1500 கிலோமீட்டர் ஓடியிருக்கிறார். இது ஒரு சாதனை என்றும் அந்த போட்டோவைப் பகிர்ந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சோனு சூட் புதிதாக ‘பதேஹ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ளது.