2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 108 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. அண்டை மாநிலமான கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கட்சியின் ‘நீயா நானா…’ மல்லுக்கட்டுதான் கேரள அரசியலின் ஹாட் டாப்பிக்.
‘மத்தியில் இணக்கம்; மாநிலத்தில் பிணக்கம்’ என்கிற ரீதியில், இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணியும், கூட்டணியின் அச்சாணியாக விளங்கும் அகில இந்திய காங்கிரஸும் கேரளாவில் நேருக்கு நேராக கோதாவில் குதித்தன. குறிப்பாக, வயநாடு தொகுதியில் களமிறங்கிய ராகுலுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தேசிய தலைவர் டி. ராஜாவின் மனைவியும், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜாவுக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர் அரசியல் விமர்சகர்களையே முகம் சுழிக்க வைத்தது. இவர்களின் காரசார யுத்தத்துக்கு இடையே பா.ஜ.க-வின் கேரள மாநில தலைவர் சுரேந்திரனும் களத்தில் இறங்கியதால் வயநாடு தொகுதியே தேசிய அளவில் உற்று நோக்கப்படும் முக்கிய தொகுதியாக மாறியது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதியில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய ராகுலை, 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெறச் செய்தார்கள் வயநாடு மக்கள். இந்த முறை அதைவிட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வயநாட்டில் வெல்வார் ராகுல் எனச் சவால் விடுகிறது கேரள காங்கிரஸ். ஆனால், களநிலவரம் அதிகமான சவால்களையே ராகுலுக்கு அளித்திருக்கிறது என்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “வயநாடு எம்.பி-யாக தொகுதிக்குள் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த வளர்ச்சிப் பணிகளையும் ராகுல் மேற்கொள்ளவில்லை, மக்களால் அவரை எளிதில் அணுக முடியவில்லை. கட்சி அடிப்படையிலும் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வில் இணைந்தது; ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் கேரளாவில் மோதுவது என ராகுலுக்கு பாதகமான அம்சங்கள் அதிகம். தவிர கேரளா முழுவதும் காங்கிரஸா கம்யூனிஸ்டா என இருமுனை போட்டி நிலவும் சூழலில், ராகுல் மீதான விமர்சனங்களைப் பூதாகரமாக்கியது பா.ஜ.க. இதன்மூலம் தங்களுக்கான வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும் வேலையும் பா.ஜ.க முன்னெடுத்திருக்கிறது. வயநாடு காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி என்பது மட்டுமே ராகுலுக்கு பெரிய ப்ளஸ்” என்கிறார்கள்.
வயநாடு மாவட்ட பா.ஜ.க தலைவர் பிரசாத் நம்மிடம் பேசுகையில், “ ‘மத்தியில் கூட்டு மாநிலத்தில் வேட்டு’ என்ற இரட்டை வேடத்தில் இந்த இரண்டு கட்சியினரும் மக்கள் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டில் யார் வென்றாலும் அது ஒன்றுதான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலைக்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்” என்றார்.
வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், “வயநாடு எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இடது ஜனநாயக முன்னணிக்கோ, பா.ஜ.க-வுக்கோ இங்கு வேலையே இல்லை. இடது ஜனநாயக முன்னணியும், பா.ஜ.க வும் தான் ஓரணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரளாவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்கள் எப்போதும் எங்களின் நேரடி எதிரி தான்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தேசிய செயலாளர் டி. ராஜா நம்மிடம் பேசுகையில், “நேரடியாக பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டிய காங்கிரஸும் ராகுல் காந்தியும் கேரளாவில் குறுகிய மனப்பான்மையைக் கொண்டு கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறார்கள். வயநாட்டில் எங்களை எதிர்த்து போட்டியிட்ட தவறுக்காக நிச்சயம் அவர்கள் வருத்தப்படப்போகிறார்கள்” என்றார்.
“இருவரில் யார் செய்வது சரி, தவறு என்று சொல்லமுடியவில்லை. மோடியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கேரளாவில் இந்த இரண்டு தரப்பினரும் செய்தது வித்தியாசமான அரசியல்.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த நிலையில் கேரளாவின் மூத்த பத்திரிகையாளர்கள் பேசும்போது, “கம்யூனிஸிட், காங்கிரஸ் பிரிந்து நிறு அரசியல் செய்தாலும், பினராய் விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின் மீதான அதிருப்தியும், பா.ஜ.க-வின் வெறுப்பு பிரசாரங்களும் இந்த முறை கேரளாவில் காங்கிரஸுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற கோணத்திலும் இதனை அணுக வேண்டி உள்ளது.
திருச்சூர், திருவனந்தபுரம் போன்ற ஒன்றிரண்டு தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க-வினர் டஃப் கொடுப்பார்கள். வயநாடு தொகுதி ரிசல்ட்டின் தாக்கம் கேரளா முழுக்க எதிரொலிக்கும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs