இந்திரா காந்தி உட்பட காங்கிரஸார் படுதோல்வி அடைந்தனர். ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. மொராஜி தேசாய் பிரதமரானார்.
ஆனால், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் தங்களின் தலைவர் இந்திரா காந்தியை எப்படியாவது வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.
இதனால் 1978-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் காங்கிரஸ் எம்பி வீரேந்திர பாட்டீல் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்கு பதில் இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 ஆண்டுகளில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 1980-ல் இடைக்கால தேர்தல் நடந்தது. அப்போது, இந்திரா காந்தி உத்தர பிரதேசம் ரேபரேலி மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் (தற்போது தெலங்கானா) மேதக் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார்.
அப்போது இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி சார்பில் ஜெய்பால் ரெட்டி, ஜனதா (எஸ்) கட்சியில் இருந்து கேசவ்ராவ் ஜாதவ், சுயேச்சைகளாக கண்டாபாபு, சகுந்தலா தேவி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதில், மேதக் தொகுதியில் மொத்தம் 4,45,289 வாக்குகள் பதிவாயின. இதில், இந்திரா காந்திக்கு 3,15,077 வாக்குகள் கிடைத்தன. அதாவது 67.9 சதவீத வாக்குகள் இந்திரா காந்திக்கே பதிவானது. ரேபரேலி தொகுதியிலும் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலுக்கு பின்னர் அவர் ரேபரேலி தொகுதியிலிருந்து ராஜினாமா செய்தார். மேதக் எம்பியாக அவர் தொடர்ந்தார்.
சங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த ஜில்லா பரிஷத் கூட்டத்திலும், 1984-ல்மேதக்கில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநாட்டிலும் இந்திரா காந்தி கலந்துகொண்டார். பல்வேறு நல திட்டங்களுக்கு அவர் மேதக்கில் அடிக்கல் நாட்டியுள்ளார். பிரதமராக பதவி வகித்து வந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு கொல்லபட்ட போது அவர் மேதக் தொகுதி எம்பியாகவும் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு தற்போது தெலங்கானா மாநிலத்தில் மேதக் உள்ளது. இதன் மக்களவை தொகுதியில் கடந்த 2009-14 ம் ஆண்டுவரை நடிகை விஜயசாந்தி டிஆர்எஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-19 வரை கே. சந்திரசேகர ராவ் மேதக் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக பணியாற்றினார்.
எமெர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்திக்கு ‘கை’ கொடுத்த மேதக் மக்களவை தொகுதியை காங்கிரஸார் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.