`ஆனந்தராகம்’ பாடிய தேன் குரல் தற்போது நிசப்தமாய் அடங்கிப்போயிருக்கிறது. ஆம்… `ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ கேட்க கேட்க எந்தக் காலத்திலும் திகட்டாத பாடலைப் பாடிய பாடகி உமா ரமணன் மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘பூபாளம் இசைக்கும்’, ‘கண்மணி நீ வரக் காத்திருந்தேன்’, ‘நீ பாதி நான் பாதி கண்ணே’, ‘ஒன்ன பார்த்த நேரத்துல’ என எண்ணற்ற பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் இதயங்களை இனிக்கவைத்தவர். குறிப்பாக, சினிமாவில் பாடகியாக அறிமுகமான புதிதில், இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’, ‘ஆசை ராஜா ஆரீரோ’, ‘ஆனந்த ராகம்’ என அடுத்தடுத்த மூன்று பாடல்கள் உமா ரமணனுக்கு மாபெரும் ஹிட் பாடல்களாய் அமைந்தன. இந்த மூன்று ஹிட் பாடல்களையும் எழுதிய இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் பேசினேன்.
“உமா ரமணன் நல்ல அனுபவம் வாய்ந்த பாடகி. நாங்க திரைப்படங்களுக்கு இசையமைக்கறதுக்கு முன்னாடி லைட் மியூசிக் பண்ணிக்கிட்டிருந்த காலத்துல உமா ரமணன் நம்பர் ஒண்ணா உச்சத்துல இருந்தாங்க. நிறைய கச்சேரிகள் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ‘யாருப்பா இவங்க… ரொம்ப சூப்பரா பாடுறாங்களே’ன்னு சொல்லி, அவங்கக் குரலை அப்படி ரசிச்சிருக்கோம். பின்பு சினிமாவுல எங்களோட வளர்ச்சி வந்ததுக்கப்புறம் ‘இந்தப் பாட்டை உமா ரமணனைப் பாடவைக்கலாமே’ன்னு இளையராஜா அண்ணனுக்கு ஐடியா வந்து பாடவெச்சார்.
உமா ரமணன் குரல் ஏற்கனவே, பரிச்சயமானதுங்கிறதாலயும் தனித்துவமா இருந்ததாலும்தான் அண்ணன் தொடர்ந்து பாடல்களைக் கொடுத்தார். திறமையானவங்களை அண்ணன் விடமாட்டார். அதிகமான பாடல்களைக் கொடுத்துக்கிட்டே இருப்பார். எந்தப் பாட்டுக்கு, யார் பாடினா கரெக்ட்டா இருக்கும்னு சரியா கணிச்சு வாய்ப்பு கொடுப்பார். அப்படித்தான், உமா ரமணனையும் தன்னோட இசையில தொடர்ந்து பாடவெச்சார்.
அவங்களோடது, எந்தவித குறையும் தவறும் கண்டுபிடிச்சு சொல்லமுடியாத அளவுக்குத் தெளிவான குரல். சங்கதி, தமிழ் உச்சரிப்பு எல்லாமே அவ்ளோ சுத்தமா இருக்கும். அழகா கிட்டார் வாசிக்கிற மாதிரி பாடுவாங்க. ராஜா அண்ணன் ஸ்டூடியோவுக்கு வரும்போதெல்லாம் எல்லோர்க்கிட்டேயும் நல்லா பேசுவாங்க. அப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம். மத்தபடி பெருசா தொடர்புகள் இல்ல. நேர்ல சந்திக்கவும் இல்ல. ஆனா, நான் ரசிக்கிற குரல்களில் முக்கியமான குரல் உமாவோட குரல்தான். ரொம்ப மென்மையா இருக்கும்.
‘செவ்வரளி தோட்டத்திலே’ பாட்டுல அப்படியே கொஞ்சும் அந்தக் குரல். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துல வர்ற ‘ஆனந்த ராகம்’, ‘நிழல்கள்’ல ‘பூங்கதவே தாழ்திறவாய்’, ‘மூடுபனி’யில ‘ஆசை ராஜா ஆரீரோ’ன்னு அவங்க பாடின முதல் மூன்று ஹிட் பாடல்கள் நான் எழுதினதுதான். ‘ஆசை ராஜா ஆரீரோ’ பாடல்ல அவங்களோட குரல் நம்ம இதயத்துக்குப் போயி அப்படியே உருக வெச்சுடும். அவ்ளோ அற்புதமா பாடியிருப்பாங்க.
என் பல பாடல்களைப் பாடியிருந்தாலும், ‘பாரு பாரு பட்டணம் பாரு’ படத்தோட ‘யார் தூரிகை செய்த ஓவியம்’ பாட்டுதான் எல்லோரும் நோட் பண்ண மறந்த பாட்டு. இந்தப் பாட்டை பெருசா கவனிச்சிருக்கமாட்டாங்க. ஆனா, இந்தப் பாட்டுதான் உமா ரமணன் பாடுனதுல என்னோட ஃபேவரைட். வரிகளும் அவங்க வர்ணனையும் ரொம்ப அழகா இணைஞ்சுப் போயிருக்கும். அப்படியொரு இனிமையான மென்மையான குரலைக்கொண்ட உமா ரமணனின் இழப்பு, தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு.
இப்ப இடையில் அவங்களை நேரில் சந்தித்திருந்திருக்கலாமோ அப்படின்னு தோணுது. நான் வெளியூரில் இருப்பதால, இன்னைக்கு உமா ரமணனுக்கு அஞ்சலி செலுத்த நேர்ல வர முடியாதது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதேமாதிரி, எனக்கு இன்னொரு வருத்தமும் இருக்கு. உமா ரமணன் மறைவுக்கப்புறம் அவங்களோட பாடல்களைப் பாராட்டுறோம்; கொண்டாடுறோம். முன்னாடியே அவங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்திருக்கலாமோங்கிற வருத்தம் இருக்கு” என்கிறார் ஆதங்கத்துடன்.