புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான ஊர்வலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாருமே கலந்துகொள்ளாமல் விலகி நின்றது தெரிய வந்துள்ளது.
காங்கிரஸின் காந்தி குடும்பத்து இளைய மருமகளாக இருப்பவர் மேனகா காந்தி. பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் இவர் தன் கட்சிக்காக உ.பி.யின் சுல்தான்பூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மகனான வருண் காந்திக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2019 தேர்தலில் பிலிபித் தொகுதி எம்பியாக இருந்த வருணுக்கு பதிலாக உ.பி மாநில அமைச்சர் ஜிதேந்திரா பிரசாத் போட்டியிடுகிறார். காங்கிரஸில் ராகுலுக்கு நெருகமானத் தலைவராக இருந்த இவர், பாஜகவில் சமீபத்தில் இணைந்தவர்.
சுல்தான்பூரின் எம்பியான மேனகாவுக்கு பாஜக கடைசி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பை அளித்தது. இதற்கு, காந்தி குடும்பத்தில் இருந்து வந்த தாய் மற்றும் மகன் மீது பாஜக சற்று அதிருப்தியுடன் இருப்பதாகப் பேசப்படுகிறது. இச்சூழலில், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் மேனகா காந்தி. முன்னதாக, அயோத்யா – அலகாபாத் நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான ஊர்வலத்தையும் நடத்தினார். இதில், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் எவருமே கலந்துகொள்ளவில்லை. உ.பி.யில் அமைச்சர்களாக இருக்கும் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நிஷாத் கட்சியின் தலைவரும், உபி மீன்வளத் துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத் மற்றும் அப்னா தளம் கட்சியின் மூத்த தலைவராகவும் உபியின் தொலிநுட்பக் கல்வித் துறை அமைச்சராகவும் உள்ள ஆஷிஷ் பட்டேல் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள அமேதி தொகுதியில் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர்களில் உத்தராகண்டின் புஷ்கர் சிங் தாமி மற்றும் ம.பி.யின் மோஹன், உ.பி.யின் துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னணியில் கட்சி தலைமைக்கு வருண் அளித்த மறுப்பும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. ரேபரேலியில் பிரியங்கா காந்தி காங்கிரஸுக்கான வேட்பாளர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை எதிர்த்து பாஜகவுக்காகப் போட்டியிடும்படி கூறியதை வருண் காந்தி ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தாய் மேனகா, மகன் வருண் ஆகிய இருவருடனும் விலகி இருப்பதாகக் கருதப்படுகிறது.
கரோனா காலம் முதல் பாஜக எம்பியான வருண் காந்தி திடீரென தனது தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கத் தொடங்கி இருந்தார். அப்போது முதல் வருண் மீது பாஜக அதிருப்தி காட்டத் துவங்கி விட்டது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆறாவது கட்டத்தில் மே 24-ல் சுல்தான்பூரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக ராம் புவால் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் சார்பில் உதய் ராஜ் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.