புதுடெல்லி: “வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றி பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை” என விமர்சித்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை மோடி கூறியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் என்ன எழுதியிருக்கிறது, நாங்கள் என்ன உத்தரவாதம் அளித்துள்ளோம் என்பதை வாக்காளர்கள் தாங்களாகவே படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாளிகள். எங்கள் உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை, தெளிவானவை. நாங்கள் அதை அவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை. உங்கள் புரிதலுக்காக அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன்.
1.இளைஞர்களுக்கு நீதி: பாஜகவின் கொள்கைகளால் இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதியளிக்கிறது.
2. பெண்களுக்கு நியாயம்: நம் நாட்டின் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது.
3. விவசாயிகளுக்கு நியாயம்: நியாயமான விலையைக் கேட்டதற்காக சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது.
4. தொழிலாளர்களுக்கு நியாயம்: உங்கள் ஆட்சியில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது.
5. ஏழைகளுக்கு நியாயம்: ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் உரிமையைப் நிலைநிறுத்துவது.
உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதத்தில் நிறைய பொய்கள் இருந்தன. பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது. காங்கிரஸ் சமரச அரசியலை செய்துவருகிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதையும் நாங்கள் கேட்டிருக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே சமரசக் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இந்தியாவுக்கான சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 54.76% அதிகரித்து 2023-24ல் 101 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
உங்கள் கடிதத்தில், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை பட்டியலின விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து, பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட 10 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு உங்கள் கட்சிக்கு உத்தரவிடும்படி இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். எனது முந்தைய கடிதத்தில் நான் குறிப்பிட்டது போல் வாக்குக்காக பிரிவினை மற்றும் வகுப்புவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வார்கள். 1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான்.
இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர அரசியல் சட்டத்தை மாற்ற நினைப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் தலைவர்கள் அதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 16-வது பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் நீங்கள் எதிர்ப்பார்த்த வாக்குகள் கிடைக்காததால் கவலையில் இருக்கிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றிப் பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை.
உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கை சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியை எவ்வாறு கொண்டு வருவோம் என்பதைப் பற்றி பேசுகிறது. தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா?” என்று அந்தக் கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.