புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் டெல்லியை சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்துவீசி மிரட்டும் அவர் தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு அடி வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆட்டங்களை தவறவிட்ட அவர் நேற்று முன்தினம் நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் களம் திரும்பினார். ஆனால் அவர் தனது 4-வது ஓவரில் முதல் பந்தை வீசிய நிலையில் மீண்டும் காயத்தில் சிக்கி வெளியேறினார். அவருக்கு வயிற்று பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனவே அவர் ஐ.பி.எல். தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். அதேநேரத்தில் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளருக்கான சிறப்பு ஒப்பந்தம் வழங்க தயாராக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டால் காயத்துக்கான சிகிச்சை பொறுப்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு கவனிக்கும்.