தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டியது, உள்ளடி வேலை செய்தது என ஏற்கெனவே வடமாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை அமைச்சர்மீது அறிவாலயத்தில் புகார்கள் வரிசைகட்டி நிற்க, தற்போது அவருடைய மனைவியின் போன் உரையாடல் ஆடியோ ஒன்றும் அறிவாலயத்தைக் கொதிக்கவைத்திருக்கிறதாம்.
சமீபத்தில் அகிம்சை அமைச்சரை ‘சமூக நிகழ்ச்சி’யில் கலந்துகொள்ளச் சொல்லி சிலர் போனில் தொடர்புகொண்டார்களாம். போனை எடுத்த அமைச்சரின் மனைவி, `பேசுபவர் தெரிந்தவர்தானே…’ என்ற நம்பிக்கையில் தன் மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார். “நாடாளுமன்றத் தேர்தலில் என் மகனுக்கு சீட் கேட்டிருந்தோம். ஆனால், ஏதேதோ காரணம் சொல்லி கட்சித் தலைமை நிராகரித்துவிட்டது. இது எல்லாத்துக்கும் காரணம், அந்த சீனியர் அமைச்சர்தான். தன் மகனுக்கு சீட் வாங்க, என் மகனைப் பலிகொடுத்துவிட்டார். அவருடைய மகன் தோற்க வேண்டும். அவரின் அமைச்சர் பதவியும் போக வேண்டும்” என அவர் அடுக்கிக்கொண்டே போயிருக்கிறார். இந்தப் பேச்சு முழுவதையும் பதிவுசெய்துகொண்ட சமூகத்து முக்கிய நிர்வாகி, அதை அப்படியே அந்த சீனியர் அமைச்சர் தரப்புக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டாராம்.
ஆடியோவைக் கேட்டுக் கொதித்துப்போன அந்த சீனியர் அமைச்சர், “தேர்தல் முடிவு வரட்டும்… யார் பதவி பறிபோகிறது எனப் பார்ப்போம்” எனக் கொந்தளித்துவிட்டாராம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனும் மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் தலைவர்களை மாற்றுவதற்காகத் தீவிரம் காட்டிவருகிறது மாநிலத் தலைமை. முதற்கட்டமாக சென்னையில் இரண்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் தலா ஒன்று என ஆறு இடங்களுக்கு மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.
இந்த நியமனத்தில் தன் பங்குக்கு இரண்டு, முன்னாள் மத்திய அமைச்சரான தன் குருநாதர் தரப்புக்கு இரண்டு, தன் சகாக்கள் பங்குக்கு இரண்டு எனப் பிரித்துக் கொடுத்து, அவர்களிடமிருந்து மட்டும் பரிந்துரைகளை வாங்கிவருகிறதாம் தலைமை. “பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஆட்டம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது” எனக் கிசுகிசுக்கிறார்கள் எதிர்க்கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் திடீரென கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தத் திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என விசாரித்தால், “அ.ம.மு.க-வில் இருந்தபோது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றவர் நாராயணன். ஆனால், தி.மு.க-வில் கவுன்சிலர் சீட்கூட அவருக்குக் கொடுக்கவில்லை.
மாவட்டச் செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசனோ, இந்தத் தேர்தலில் ஒரு பூத் கமிட்டி மெம்பராகக்கூட தாம்பரம் நாராயணனை நியமிக்கவில்லை. எம்.எல்.ஏ ராஜாவும், அமைச்சர் தா.மோ.அன்பரசனும் கட்சிப் பொறுப்புகளில் தங்களுக்கான ஆட்களை நியமித்துக்கொண்டு தனி ராஜாங்கமே நடத்துகிறார்கள். அண்ணனுக்கு மரியாதையே இல்லை. அதுமட்டுமல்ல, கட்சியில் சேர்ந்த புதிதிலேயே தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா-வின் ஆட்கள், நாராயணனைப் பொது இடத்தில் வைத்து அடித்துவிட்டார்கள். அது குறித்தப் புகாரிலும் நடவடிக்கை இல்லை. இப்படித் தொடர் அவமானங்களால்தான் அண்ணன் கட்சியிலிருந்தே விலகிவிட்டார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள், தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு வசதியாக, கலைவாணர் அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம். இதற்கான வாடகை ஒப்பந்தத் தொகையோடு ஒவ்வொரு மேட்ச்சுக்கும் சில டிக்கெட்டுகளை, அதுவும் தாங்கள் கேட்கும் ஸ்டாண்டுகளில் கொடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கிறார்களாம் சில அதிகாரிகள்.
ஹனி மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ ஒருவரின் உறவினர், தொல்பொருள்கள் பராமரிப்புகளைக் கண்காணிக்கும் பிரிவின் மூத்த அதிகாரி ஆகியோரின் பெயர்கள்தான் இதில் பெரிய அளவில் அடிபடுகின்றன. அப்படிக் கிடைக்கும் டிக்கெட்டுகளை ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்பனை செய்தும் காசு பார்க்கிறார்களாம் அந்த அதிகாரிகள்!
கோடையைச் சமாளிக்க தண்ணீர், நீர்மோர் பந்தல்களை அமைக்கச் சொல்லி பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும் இதேபோல ‘அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’வினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், பன்னீர் குழுவின் சார்பில் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தண்ணீர் பந்தலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதைத் திறந்துவைத்த பன்னீர்செல்வத்தின் முகத்தில் உற்சாகம் மிஸ்ஸிங். ‘பன்னீர் ஏன் டல்லாக இருக்கிறார்?’ என விசாரித்தால், “கோடைகாலத் தண்ணீர் பந்தலை, அனைத்துப் பகுதிகளிலும் திறக்கச் சொல்லி ஐயா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதைச் செய்வதற்குத்தான் ஆள் இல்லை. ஜூன் 4-ம் தேதி ரிசல்ட் வெளியான பிறகாவது தனக்கு ஆதரவு பெருகுமா என்ற மனக்குழப்பத்தில் இருக்கிறார் ஐயா…” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs