புடவுன்: “கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் புடவுனில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆதித்யா யாதவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “பாஜகவினால் அரசியல் சாசனத்துக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, அவர்களின் முடிவால் உங்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பார்க்கும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று சிந்தியுங்கள். இப்போது அவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க முன்வருவார்கள்.
இந்தத் தேர்தலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாஜகவினர் அரசியல் சாசனத்துக்கு எதிராக இருப்பது தெரியும். அவர்கள் இப்போது உங்களின் வாழ்க்கைக்கு பின்னாலும் இருக்கிறார்கள். முதலில் அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பினார்கள். இரண்டாவதாக கோவிஷீல்டு தடுப்பூசி பிரச்சினை இப்போது உங்கள் முன்பு வந்துள்ளது. தடுப்பூசி தயாரித்த நிறுவங்களிடமிருந்து பாஜக தேர்தல் நன்கொடை பெற்றுள்ளது” என்று பேசினார்.
முன்னதாக, கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதினும் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இந்த ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் கோவின் (CoWIN) சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டதும் கவனிக்கத்தக்கது.