பெய்ஜிங்: தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில், வாகனங்கள் அதில் கவிழ்ந்து 24 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மெய்சூ நகரம் மற்றும் அதையொட்டிய கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெய்சூ நகருக்கும் டபு கவுன்ட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது.
மலைப் பகுதியில் சுமார் 18 மீட்டர் நீளத்துக்கு சாலை இடிந்து விழுந்ததில் 18 கார்கள் அதில் சரிந்து உருண்டோடின. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.