புதுடெல்லி: செல்போன் செயலியில் செய்யப்பட்டு வந்த மோசடி முதலீட்டுத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த சோதனை நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
எச்பிஇசட் டோக்கன் என்ற பெயரில் செல்போன் செயலி ஒன்று பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலி மூலம் பணத்தை முதலீடு செய்வது நடந்து வந்தது. கிரிப்டோ கரன்சி மூலம் இந்த முதலீடு நடைபெற்றது. ஆனால் இந்த செயலி முதலீடு செய்பவர்களை ஏமாற்றியுள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும் தெரியவந்தது.
இந்த செயலியை ஷிகு டெக்னாலஜி நிறுவனம், லில்லியன் டெக்னோகேப் தனியார் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. மோசடி நடைபெறுவதாக தெரியவந்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த சோதனையை 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிறுவனங்கள் தொடர்பான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராஜஸ்தானில் ஜோத்பூர், மகாராஷ்டிராவில் மும்பை, கர்நாடகாவில் பெங்களூரு, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், பிஹார், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சோதனை நடந்துள்ளது.
சோதனையில் டிஜிட்டல் கருவிகள், லேப்-டாப், செல்போன்கள், ஏடிஎம், டெபிட் கார்டுகள், இ-மெயில் முகவரிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவற்றை முடக்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஹவாலா மூலமாகவும், கிரிப்டோ கரன்சி மூலமாகவும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை இந்த நிறுவனங்கள் அடிக்கடி செய்துள்ளன என்று சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது மொபைல் செயலிகள் மூலமாக அதிக அளவில் மோசடிகள் நடந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.