சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல் வீசி கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தை அடுத்து, மூன்று மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரு தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கோயிலுக்கு சாமி கும்பிட வருவோம், திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எந்த ஓர் உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், மீண்டும் வட்டாட்சியர் தலைமையில் இன்று (மே 3) இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது மோதலாக மாறியது. இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த கடைகள் மீதும் கற்களை வீசி தாக்கி, தீ வைத்தனர். இதில் பேக்கரி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு இரு தரப்பினரும் தீ வைத்தனர்.
கோயிலில் வழிபாடு நடத்த உரிமை கோரிய தரப்பினர் சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
கோயில் விழா நடத்துவதிலும், வழிபாடு உரிமையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் சம்பவ இடம் விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
மேலும், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸாரும் தீவட்டிப்பட்டி பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ வைத்த கடைகளில், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கோயில் விழாவில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.