புதுடெல்லி: “கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா என்ற பாலியல் குற்றவாளியை மேடையில் வைத்துக் கொண்டு, அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவமதித்துள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். கர்நாடகாவில் இந்தப் பாலியல் குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு, அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு கேட்டார். நீங்கள் வாக்களித்தால் அது உதவியாக இருக்கும் என்றார்.
பிரதமர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவமதித்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து பாஜக தலைவர்களும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருவதற்கு பயப்படுகிறார். அனைத்து பொதுக் கூட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.
பிரதமர் மோடி, பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்திருக்கலாம், ஆனால், அவர் அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தார். உலகில் எந்த ஒரு தலைவரும் ஒரு பாலியல் குற்றவாளிக்காக வாக்கு கேட்டிருக்க மாட்டார்கள். இதுதான் பாஜகவின் சித்தாந்தம். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சிக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளனர்” என்றார் ராகுல் காந்தி.