புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, பிப்ரவரி 2-ம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி வீட்டிற்கு அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் விவேகானந்தன் என்ற முதியவரையும், கருணாஸ் என்ற இளைஞரையும் கைதுசெய்தனர், முத்தியால்பேட்டை போலீஸார். அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில், எஸ்.பி லட்சுமி சைஜன்யா, இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் எஸ்.ஐ சிவப்பிரகாசம் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. போக்சோ வழக்குகளில் 90 நாள்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.
அதன்படி முத்தியால்பேட்டை போலீஸாரும், சிறப்பு விசாரணைக் குழுவினரும் குற்றப்பத்திரிகையை தயாரித்து முடித்தனர். ஏப்ரல் 25-ம் தேதி தடயவியல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக 500 பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை அறிக்கை, டி.ஜி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழுவின் சீனியர் எஸ்.பி கலைவாணன், கிழக்கு எஸ்.பி லட்சுமி சைஜன்யா, சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி ந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் எஸ்.ஐ சிவப்பிரகாசம் உள்ளிட்ட போலீஸார், போக்சோ நீதிமன்ற நீதிபதி ஷோபனா முன்பு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.