சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “கடந்த 24.4.2024-ம் ஆண்டு ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றும் ஒருவர், என்னிடம் (பெண் காவலருக்கு) போனில் பேசினார். அப்போது அவர், பெண் காவல் உயரதிகாரி ஒருவருக்கு பி.எஸ்.ஓ-வாக செல்ல விருப்பமா என்று கேட்டார். அதற்கு நான் ஒகே என்று கூறினேன். இதுதொடர்பாக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பேசுவதாக அந்த எழுத்தர் என்னிடம் தெரிவித்தார். அதனால் இன்ஸ்பெக்டரின் போன் அழைப்புக்காக நான் காத்திருந்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு போன் நம்பரிலிருந்து மிஸ்டு கால் வந்தது. அதனால் நான் அந்த செல்போன் நம்பரைத் தொடர்பு கொண்டேன். அப்போது எதிர்முனையில் பெண் குரலில் பேசியவர், தன்னை இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர், என்னுடைய முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டார்.
அப்போது பெண் அதிகாரி என்னைப் பார்த்திருப்பதாக போனில பேசியவர் என்னிடம் கூறினார். அதற்கு நான், அந்த பெண் அதிகாரி என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று பதிலளித்தேன். இதையடுத்து நான், எனக்கு தெரிந்த ஒரு பெண் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு அவரா என்று கேட்டேன். அதற்கு போனில் பேசியவர், அவர் இல்லை இந்த அதிகாரி ஏடிசி என்று கூறினார். இதையடுத்துதான் எதிர்முனையில் பேசியவர், உங்களின் (பெண் காவலரின்) குரல் மற்றும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என ஆபாசமாக விமர்சித்தார். மேலும் ஆண் நபர் ஒருவரை இரவு வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து போனில் பேசியவர், புதிய வீடு வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தைகளைக் கூறினார். இதையடுத்து என்னுடைய அப்பா குறித்து போனில் பேசியவர் விசாரித்ததும் நான் போன் இணைப்பைத் துண்டித்துவிட்டேன். எனவே என்னிடம் பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சைபர் க்ரைம் பிரிவு போலீஸார், வழக்குப்பதிவு செய்து பெண் காவலருக்கு வந்த போன் அழைப்பு நம்பரை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் நகரைச் சேர்ந்த பெரியசாமி (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர், இதைப் போல பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியசாமி, பெண் காவலர்களின் தொலைபேசி எண்களை எடுத்து பெண் குரலில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இவர் திருப்பூர், தர்மபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆள்மாறாட்டம் செய்வதோடு பெண் காவலர்களுக்கு போனில் பாலியல் துன்புறுத்தல் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பெரியசாமி, பெண் காவலர்களின் போன் நம்பரை சேகரித்து அவர்களிடம் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இவரே எழுத்தராக முதலில் பெண் காவலரிடம் பேசுவார். பின்னர், பெண் இன்ஸ்பெக்டர் போல குரலை மாற்றி பெண் காவலர்களிடம் பேசி வந்திருக்கிறார். இவருக்கு பெண் காவலர்களின் போன் நம்பர் எப்படி கிடைத்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.