வாராணசி: பிரதமர் மோடியை போல் மிமிக்ரி செய்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஷ்யாம் ரங்கீலா, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாராணசியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். 28 வயதாகும் இவரின் நையாண்டிகளால் ஒருகட்டத்தில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டே இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை ஆதரித்தவர் இவர். எனினும், சில ஆண்டுகளில் பாஜகவை எதிர்த்து நையாண்டி செய்ய ஆரம்பித்தார்.
தொடர்ந்து 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அரசியல் தளத்தில் இயங்கி வந்த ஷ்யாம் ரங்கீலா, தற்போது நடைபெற்றுவரும் மக்களவை தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், சூரத் மற்றும் இந்தூர் போல் எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ஷ்யாம் ரங்கீலா, “2014ல் பிரதமர் மோடியின் சீடனாக இருந்தவன் நான். அப்போது, பிரதமருக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் மிமிக்ரி வீடியோக்களையும் பகிர்ந்துள்ளேன். அதனைப் பார்த்தால், அடுத்த 70 ஆண்டுகளுக்கு நான் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பேன் என்ற அளவுக்கு இருக்கும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. எனவே, இனி லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன்.
சூரத் மற்றும் இந்தூர் போல் இல்லாமல், நான் இந்த வாரம் வாராணசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
वाराणसी मैं आ रहा हूँ…#ShyamRangeelaForVaranasi pic.twitter.com/8BOFx4nnjn
— Shyam Rangeela (@ShyamRangeela) May 1, 2024