பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்படவுள்ளது.
ஹோமம் நடத்திய ரேவண்ணா: பாலியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் பிரஜ்வலின் தந்தையுமான ஹெச்.டி.ரேவண்ணா ஹோலநரசிப்பூரில் உள்ள தனது வீட்டில் ஹோமம் நடத்தியுள்ளார். அர்ச்சகர்கள் முன்னிலையில் வீட்டில் நடத்தப்பட்ட ஹோமத்தில் ரேவண்ணா மற்றும் அவரது மனைவி பவானி ஆகியோர் சடங்குகள் செய்துள்ளனர். சடங்குகளை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவர், “சதி திட்டத்தால் எங்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அனைத்தை பற்றியும் விரைவில் வெளியே பேசுவேன்” என்று கூறினார்.